மிஃராஜ் .தொடர்ச்சி
மிஃராஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.
1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.
பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமின்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகின்றது. இதனையே
‘பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்’ என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகின்றது.
2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,
புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது.
புராக்கிலான பயணமும், ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சாதா நிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் “நிஃமத்தில்” அருளில் தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச்செய்வான் என்பதையும் காட்டுகிறது.
கப்ரில் தொழுகை
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா செல்லும் வழியில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்ரில் தொழுது கொண்டிருப்பதை கண்டதாகவும், மஸ்ஜிதுல் அக்ஸா சென்றடைந்த போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வரவேற்க மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தயார் நிலையில் நின்றதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.
ஆன்மாவின் வேகம்
மேலும் கூடவே மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத நபிமார்கள் பெருமானாரை வழியனுப்பிய பின்பே பிரிந்தார்கள். ஆனால், புராக் விண்ணகம் செல்லும் முன்பே நபிமார்கள் அங்கு சென்று விட்டார்கள்.
இது, நபிமார்களுடைய ஆன்மாவின் வேகம் உச்ச ஒளி வேகங்கொண்ட புராக்கின் வேகத்தை விட வேகமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
மரணித்தவர் உதவுதல்
அல்லாஹ்வை தரிசித்து உரையாடிய பின் ஐம்பது வேளை தொழுகையை பரிசாக கொண்டுவந்த போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஐந்தாக குறைக்கும் வரை வாதாடியது.
“தொழுகை முஃமினின் மிஃராஜ்” அல்லாஹ்வை காண்பது மிஃராஜின் பூரணம். பெருமானாரை தவிர்த்து ஏனையோர் கலப்பால் அல்லாஹ்வை காணும் பாக்கியத்தை பெறுவார் என்பதனால்.
ஊசிக்காதளவு அல்லாஹ்வுடன் வசநித்து மதிமயங்கிய அனுபவத்தை பெருமானாரிடம் எடுத்துக்கூறி தினமும் ஐம்பது வேளை இறைவனை தரிசிக்கும் ஆற்றல எல்லா உள்ளங்களுக்கும் கிடையாது. எனவே குறைத்து வாருங்கள் என்று கூறியதிலிருந்து........
1. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்கள்.
2. உயிருள்ளவர்களின் நடவடிக்கைகளில் மரணித்தவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.
3. உயிருள்ளவர்களுக்காக மரணித்தவர்கள் உதவி செய்ய முடியும் என்பது தெளிவாகின்றது.
விஞ்ஞான தத்துவம்
மிஃராஜ் பயணம் சிலேடையாகவும், இஸ்ராப் பயணம் வெளிப்படையாகவும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதானது தெரிந்த உண்மைகளை கொண்டே தெரியாத உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானத் தத்துவம் எடுத்துக் காட்டப்படுகிறது.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பௌதீக அதீத விடயங்களான மறைஞானங்கள் பகிரங்கமாக பாமரர்கள் மத்தியில் பேசக்கூடியதல்ல என்பதனால் தான் அறிவுள்ளவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளும் அமைப்பில் அல்குர்ஆன் சிலேடையாக எடுத்துக் கூறுகின்றது.
மிஃராஜ் நிகழ்வு நபித்துவ 11 ½ ல் ரஜப் திங்கள் இரவின் பிற்பகுதியில் நடந்தேறியதிலிருந்து..... பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மார்க்கம் நடுநிலையானது என்பதையும் நடுநிலை – மத்திமமானதே – மேலானது என்பதையும் காட்டுகின்றது அதாவது.
நடுநிலை
1. நபித்துவத்தின் முளுக்காலம் 23 ஆண்டுகள். இதன் சரிபாதி 11 ½ ஆண்டுகள்.
2. நுபுவ்வத்தின் ஆரம்பம் நல்ல கனவுகலாகும். இக்கனவு ரபியுல் அவ்வலில் தொடங்கியது. இதனை நுபுவ்வத்தின் தொடக்கம் என கணக்கிட்டால் ரஜப் வருடத்தின் மத்தியாகும்.
3. ஷரீஅத்தினடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் நாளாகும். இதன்படி கிழமையின் மத்தி திங்களாகம்.
4. முந்திய மார்க்கங்களில் சில ஜவாலியத் – (தீவிரம்) ஆகவும், வேறுசில ஜமாலியத் (சாத்வீகம்) ஆகவும் அமைந்துள்ளன. ஆனால் இறுதி வேதமான இம்மார்க்கம் இரண்டையும் உள்ளடக்கிய சமநிலையான மத்திய மார்க்கமாக இருப்பதனால்,
“ இந்த உம்மத் நடுத்தரமான உம்மத்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நடுத்தரமானதே சிறந்தது” என்ற அடிப்படையில் “இதுவரை தோற்றுவிக்கப்பட்ட உம்மத்துகளில் இந்த உம்மத்தே சிறந்த உம்மத்” என சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளான். இதனால், மிஃராஜ் நிகழ்வு, மத்திமத்தில் நிகழ்ந்திருப்பதால் இஸ்லாம் நடுநிலையையே போதிக்கிறது. அதுவே அழகானது. அழகையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதனை புலப்படுத்திக் காட்டுகிறது.
மிஃராஜ், ஹபீப், மஹ்பூபை நாடிச்செல்லும் பயணமாகும். இப்பயணத்தின் இன்பம் (விஸாவில்) சந்திப்பில் தங்கியிருக்கிறது. இச்சந்திப்பு அடக்கமான இரவு நேரத்தில் நிகழ்வதால் பூரண இன்பத்தை பெற முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது.
எனவே மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் ஆன்மீகப் பயணத்தின் ஒழுக்கத்தை விளக்கும் ஒரு செயல்முறை பயிற்சியாகவும் அமைந்திருப்பது புலனாகின்றது.
தொழுகை மிஃராஜின் பரிசாகும். இது முஃமினீன் மிஃராஜாகும். அதனால், தொழுகையின் அசைவுகள் அடிமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. “அடிமைத்துவத்தின் பலன் வெற்றியாகும். இதனை அத்திய்யாத்தில் பெறமுடியும். அத்தஹிய்யாத் இறைவனுக்கு முன்னாள் நபி ﷺ அவர்கள் உரையாடியதை நினைவுப்படுத்துகின்றது. அதனால், தொழும்போது நாம் நேரே அல்லாஹ்வுடன் வசனிப்பதாகவும், நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறுவதாகவும் கருதிக்கொள்ள வேண்டும். அதனால் நபி ﷺ அவர்களை நேரில் பார்ப்பதாக கற்பனை செய்துகொண்டு ஸலாம் கூறினால் நபி ﷺ அவர்கள் பதில் கூறுவார்கள் என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கேள்வி:
ரஜபு 27 மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாமா?
பதில்:
மிஃராஜ் தினத்தில் நோன்பு வைக்கலாம் என்பதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் காணக்கிடைக்கிறது.
இமாம் பைஹகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷுஃபுல் ஈமானிலும், தைலமி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் முஸ்னதுல் பிர்தவ்ஸிலும், ஸல்மானுல் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக இவ்வாறு அறிவிக்கின்றனர்:
ரஜப் மாத்தில் ஒரு இரவும், பகலும் இருக்கிறது. அத்தினத்தில் பகலில் நோன்பு வைத்து, இரவில் நின்று வணங்கினால் நூறு ஆண்டுகள் நோன்பு வைத்து வணங்கிய கூலி கிடைக்கும். அவ்விரவு ரஜப் 27வது இரவாகும். அந்நாளில்தான் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பி வைத்தான்'.
மேலும் அபான் இப்னு ஙயாஸ் அவர்கள், அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கும் மற்றொரு நபிமொழியும் பைஹகியில் காணப்படுகிறது.
ரஜபில் ஓர் இரவுண்டு. அவ்விரவில் நல்லமல் புரிவோருக்கு நூறு ஆண்டுகள் நல்லமல் புரிந்த கூலி கிடைக்கும். அது ரஜபு மாதத்தின் 27வது இரவாகும். அவ்விரவில் யாராவது 12 ரக்அத்கள் தொழுதால் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸூரத்துல் பாத்திஹாவும், வேறு ஏதாவது ஸூரத்தும் ஓத வேண்டும். ஒவ்வொர இரண்டு ரக்அத்களும் தொழுது முடித்த பின்னர், 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 100 தடவைகளும், இஸ்திக்பார் 100 தடவைகளும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது 100 தடவை ஸலவாத்துகளும் ஓதிவிட்டு மறுமை, இம்மை சம்பந்தப்பட்டவை குறித்து தேவையானவற்றை துஆச் செய்யலாம். பின்னர் பகலில் நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் அவரது துஆக்களை ஏற்றுக் கொள்வான்.
மேலே காட்டப்பெற்ற இரண்டு ஹதீஸ்களும் 'மர்பூஉ' ஆன நபிமொழிகள். இவற்றில் இரண்டாவது ஹதீஸ் முந்தையதை விட மிக பலகீனமானது என பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றனர். அத்தோடு இரண்டாவது நபிமொழியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சந்தேகத்திற்குரிய இருவர் காணப்படுவதாக இப்னு ஹஜர் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகின்றனர். என்றாலும் ஏவல், விலக்கல் போன்ற ஆணை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை எடுக்கக் கூடாது. ஆனால் பழாயில் சிறப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அமல் செய்வதற்கு பலவீனமாக நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது ஹதீஸ்கலை மேதையர்களுடையவும், மார்க்கத்தறை அறிஞர்களுடையவும் ஏகோபித்த முடிவாகும்.
ரஜப் 27 எனக்கு நபிப்பட்டம் வழங்கப்பட்டது. அத்தினத்தில் நோன்பு வைத்து நோன்பு திறக்கும் வேளையில் துஆக் கேட்டால், பத்து வருடக் குற்றங்களுக்கு அது பரிகாரமாக அமையும்.' பவாயிது நிஹாத் என்ற நூலில் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் இந்த நபி மொழியும் 'மர்பூஉ'தான்!
'யாராவது ரஜப் மாதம் 27 அன்று நோன்பு வைத்தால் அவருக்கு அல்லாஹ் 60 ஆண்டுகள் நோன்பு வைத்த கூலியை கொடுப்பான். அத்தினத்தில்தான் அண்ணல் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபிப்பட்டத்தை வழங்கினார்கள்.' ஜுஸ்உ அபீ முஆத் என்ற நூலில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக இந்த நபிமொழி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே கருத்தில் வந்துள்ள எல்லா நபிமொழிகளிலும் இந்த நபிமொழிதான் மேலானதும், 27வது இரவிலும், பகலிலும் செய்யப்படுகின்ற அமல்களுக்கு அடிப்படை ஆதாரமுமாகும்.'
ஆதார நூல்:பதாவா ரிழ்விய்யா, பாகம் 4, பக்கம் 657, 658
சுவனவாசிகளுக்கு அல்லாஹ்வின் தரிசனம் கிடைத்தால் அவர்கள் சுவனத்தின் அனைத்து இன்பங்களையும் மறந்து விடுவார்கள் என ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال الحسن: «إذا تجلى لأهل الجنة نسوا كل نعيم الجنة
அல்லாஹ்வைப் பார்க்கும் இன்பம் உலகமே கிடைத்ததைப் போன்று.சுவனத்தின் மற்ற இன்பங்கள் அந்த உலகத்தில் ஒரு சிறு
சிட்டுக்குருவியைப் போன்று என்று கூறுவார்கள்.
ولا تظنن أن أهل الجنة عند النظر إلى وجه الله تعالى يبقى للذة الحور والقصور متسع في قلوبهم، بل تلك اللذة بالإضافة إلى لذة نعيم أهل الجنة كلذة ملك الدنيا والاستيلاء على أطراف الأرض ورقاب الخلق بالإضافة إلى لذة الاستيلاء على عصفور واللعب به، والطالبون لنعيم الجنة عند أهل المعرفة وأرباب القلوب كالصبي الطالب للعب بالعصفور التارك للذة الملك وذلك لقصوره عن إدراك لذة الملك »
சுவனத்தின் மற்ற இன்பங்கள் அனைத்தையும் மறக்கச் செய்யும் அத்தகைய மாபெறும் இன்பத்தின் போது கூட அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் தன் உம்மத்தை மறக்காமல் நினைத்துப் பார்த்தார்கள் என்றால் அவர்கள் எந்தளவு தன் உம்மத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அத்தகைய நாயகத்தை என்றும் நினைத்துப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் அவர்களோடு சுவனத்தில் இணைவோம்.
இன்னும் எண்ணற்ற பாடங்களை இந்த விண்ணேற்றப் பயணம் தாங்கி நிற்கிறது.இதிலுள்ள அகமியங்களையும் பாடங்களையும் படிப்பினை களையும் விளங்கி அதைப் பின்பற்றி ஈருலக வெற்றிகளைப் பெறுவதற்கு வல்லோனாம் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.
Comments
Post a Comment