மரணம்! அது தரும் பாடங்களும்… படிப்பினைகளும்…

ஒருவருக்கு ஏற்படும் மரணம்  என்பது இன்னொருவருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ,  ஒருசமூகத்திற்கோ,  ஒரு சமுதாயத்திற்கோ சொல்கிறசெய்தி“

வாழ்ந்தால் என்னைப்போல்வாழ்!  என்றோ, அல்லது ஒரு போதும்  என்னைப் போல் வாழ்ந்துவிடாதே! 
என்றோ  இவ்விரண்டில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.

நாளை நம்முடைய மரணமும் 
உலக சமூகத்திற்கு இவ்விரண்டில்  ஏதாவது ஒன்றைத்தான் சொல்லவிருக்கின்றது.

மாநபி {ஸல்} அவர்கள் ”மரணம் என்பது ஓர் மௌன உபதேசியாகும்”  என்று கூறினார்கள்.

எப்படியானவர்களையும் மாற்றவல்ல ஆயுதமான உபதேசத்தை
மரணத்தோடு மாநபி {ஸல்} அவர்கள் ஒப்பிட்டுக்  கூறியதன் அவசியத்தை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்!

ஆயிரமாயிரம் வார்த்தைகள்,  உண்டு பண்ணாத தாக்கத்தை.. 

மிகப்பெரும் நூல்கள் உண்டு பண்ணாத தாக்கத்தை.. 

சில வேளைகளில் ஒரு  சில வார்த்தைகளைக் கொண்ட  உபதேசம்..

மனிதனிடம் ஒரு வித 
தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

அது போன்றே ஒரு மனிதனின் மரணம்,..

அந்த மரணத்தை பற்றி பேசுகிறபோதோ, 
கேள்வி படுகிறபோதோ, ..
அதைப் பார்க்கிறபோதோ...

 ஒரு நொடியில் மனித வாழ்வில்  மாற்றத்தை ஏற்படுத்திவிடும்,...

இன்னும் ஒரு படி மேலே சொன்னால்...

 வாழ்வை புரட்டிப் போட்டு விடும்  ஆற்றல் மரணத்திற்கு உண்டு
என்பதைத் தான்  மாநபி{ஸல்} அவர்களின் அழகிய மொழி நமக்கு உணர்த்துகின்றது.

தமிழகத்தில் சில நாள்களுக்கு முன்பு
ஒரு மௌனம் நிலவிக் கொண்டிருக்கின்றது. 
அந்த மௌனத்திற்கு  பின்னால் ஒரு ஆளுமையின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது  என்பதை நாம் எல்லாம் அறிவோம்.

ஆம்! தமிழகத்தின் முதலமைச்சர் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி...

, குடிமக்கள் ஆட்சியாளர் என்கிற அடிப்படையிலான தொடர்பு நமக்கும்,  அவருக்கும் இடையே இருக்கின்றது.

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம்...

உலகிலேயே மிக உயரிய மருத்துவமனையின், 

மிக உயரிய மருத்துவ  உபகரணங்களின் துணைகொண்டு, 

மிகஉயரிய மருத்துவ சிகிச்சைப் பிரிவில்,  மிக உயரிய மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பின்  கீழ் சுமார் 75 நாட்களாக  போராடி  இறுதியாக அங்கே மரணம் நிகழ்ந்திருக்கிறது.

கடைசி நிமிடம் வரை 
மதங்களைக் கடந்து,  சமயங்களைத்  தாண்டி பிரார்த்தனைகள்,  

சடங்குகள்,  வழிபாடுகள், நேர்த்திக்கடன்கள்,  லட்சக்கணக்கில், அல்ல  கோடிக்கணக்கில் செலவுகள் செய்தும்  உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

முதலமைச்சரின் மரணம் மாத்திரமல்ல.  பொதுவாக, நம்மைச் சுற்றி  யார் மரணம் அடைந்தாலும் ...

அங்கிருந்து இறைநம்பிக்கையாளர்களாகிய
  நாம் பெற வேண்டிய  பாடங்களும்,  படிப்பினைகளும் ஏராளமாக அங்கே குவிந்து கிடக்கின்றன

பெற வேண்டிய பாடங்கள்….

1. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்…

நபி ஸல் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வலியுறுத்திச் சொன்ன ஓர் அம்சம் இருக்கும் என்றால்
அது ஆரோக்கியம் எனும் அருட்கொடை குறித்து தான்.

روى الترمذي في سننه من حديث

رفاعة بن رافع    قال: قام أبوبكر الصديق على المنبر، ثم بكى فقال: قام رسول الله -صلى الله عليه وسلم- عام الأول على المنبر ثم بكى، فقال: "سؤلوا الله العفو و العافية ،
நீங்கள் அல்லாஹ்விடம்ஆரோக்கியத்தை கேளுங்கள் என்று நபி {ஸல்} அவர்கள் கூற நான்கேட்டிருக்கிறேன் என்று அபூபக்கர் சித்தீக் (ர­லி) அவர்கள் கூறினார்கள்.

فإن أحدًا لم يعط بعد اليقين خيرًا من العافية".

“நீங்கள் லாஇலாஹ இல்லல்லாஹீ என்று கூறும் வார்த்தைக்குப் பிறகு ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதனையும் சிறந்த ஒன்றாக உங்களுக்கு வழங்கப்பட வில்லை.
எனவே ( நூல்: அஹ்மத் )

மக்களுக்கு கட்டளையிட்டது மட்டும் நின்று விடாமல் ..
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேட்டுள்ளார்கள்.

اللهم إني أسألك العافية من كل بلية ، وأسألك تمام العافية ، وأسألك دوام العافية ، وأسألك الشكر على العافية ،

اللهم إني أسألك العافية من كل بلية ،
யாஅல்லாஹ்! உன்னிடம் நான், அனைத்து வகையான சோதனைகளின் போதும் ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்!

وأسألك تمام العافية ،
நிறைவான ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்!
وأسألك دوام العافية
நீடித்த ஆரோக்கியத்தைக் கேட்கிறேன்!

وأسألك الشكر على العافية ،
நீ வழங்கிய ஆரோக்கியத்திற்காக உனக்கு நன்றி செலுத்தும் நற்பண்பை உன்னிடம் கேட்கிறேன்!”
என்று மாநபி {ஸல்} அவர்கள் ஓதியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒர் அறிவிப்பை இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் தங்களின் நவாதிருல் உஸூலில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி­) அவர்கள்
இவ்வாறு துஆ செய்பவர்களாக இருந்தார்கள்..

     اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ،
யா அல்லாஹ் உன்னுடைய அருள் என்னை விட்டு நீங்குவதில் இருந்தும்,

وَتَحَوُّلِ عَافِيَتِكَ،
 “ நீ எனக்கு கொடுத்த ஆரோக்கியம் என்னிடம்இருந்துவிலகுவதை விட்டும்,

وَفُجَاءَةِ نِقْمَتِكَ،
உன்னுடைய தண்டனை திடீரென்று வருவதையும

وَجَمِيعِ سَخَطِكَ
உன்னுடைய அனைத்து கோபத்தை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று பிரார்த்தனைசெய்வார்கள்.

இது அவர்களின் (வழமையான) பிரார்த்தனைகளில் ஒன்றாகும். 
( நூல்: முஸ்லிம் )

நபி {ஸல்} அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு நபித்தோழரை நலம் விசாரிக்கச்சென்றார்கள்.

அவர் நோயினால் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் இறைவனிடம் ஆரோக்கியத்தை கேட்டு பிரார்த்தனை செய்யக்கூடாதா? 
என்றுகேட்டார்கள்.

‌அதற்கவர், ”நபிகளாரின் முன்னிலையில் யா அல்லாஹ்! மறுமையில் என்னை நீ தண்டிப்பதாக இருந்தால் இவ்வுலகத்திலேயே அதற்காக தண்டனையை வழங்கிவிடு!”
‌என்று பிரார்த்தனை செய்தார்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ் உமக்கு இவ்வுலகத்திலேயே தண்டனையை வழங்கிவிட்டால் நீர் தாங்கிக் கொள்ள முடியாது. ...

எனவே, யா அல்லாஹ் இவ்வுலத்திலும் எனக்கு நன்மையை வழங்குவாயாக! மறு உலகத்திலும் எனக்கு நன்மையைவழங்குவாயாக என்று கேட்பீராக!”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
( நூல்: திர்மிதி )

ஆரோக்கியத்தோடு இருக்கிற போது தான் ....

ஒர் இறைநம்பிக்கையாளனாக படைத்த ரப்புக்கு செய்யவேண்டிய கடமைகளையும்,

சக அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும்,

தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் முழுமையாக செய்ய முடியும்.
மேலும், அளப்பரிய அல்லாஹ்வின் நேசத்தையும் பெற முடியும்.

ஏனெனில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ

 “இறைநம்பிக்கையோடு வாழ்கிற பலகீனமான அடியாரை விட சிறந்தவரும், அல்லாஹ்வின் நேசத்திற்குரியவரும் எவர் என்றால்
ஆரோக்கியத்தோடு வாழும் இறைநம்பிக்கையாளரே!” என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல் முஸ்லிம் )

2. நோய்வாய்ப்பட்டால் அதில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும் …

عمران بن حصين
இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். 

கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.

கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். 

என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அவர்களை நலம் விசாரிக்க வந்த ஒருவர்,
“அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள்“தோழரே! நீர் அமரவேண்டாம்! 
அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். 

என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

      فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم

இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது,

وقال: لم تبكون؟!
ஏன் அழுகிறீர்கள்? 

قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛

فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم:
அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். 

அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், 

நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

"والله أكون على حالي هذا
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன்.

فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة،
ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன்,

فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه،


 நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா )
       

 

3. இறந்தால் இப்படித்தான் இறக்க வேண்டும் என்று பிறரால் விரும்பப்படுகிற அளவுக்கு நம்முடைய மரணமும் அமைய வேண்டும் ….

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

தபூக் யுத்தத்திற்காக எதிரிகளின் இருப்பிடத்திற்கே நபித்தோழர்களை அண்ணலார் அழைத்துச் சென்றிருந்த தருணம் அது.

முதல் நாள் இரவு திடீரென நான் கண்விழித்தேன். அண்ணலாரின் கூடாரத்தில் அண்ணலாரைப் பார்த்தேன். ஆனால், நபி {ஸல்} அவர்கள் அங்கு இல்லை.

உடனடியாக நபி {ஸல்} அவர்களைத் தேடியவாறு அபூபக்ர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்கு வந்தேன். அங்கு அண்ணலாரும் இல்லை, அபூபக்ர் (ரலி) அவர்களும் இல்லை.

அங்கிருந்து நேராக உமர் (ரலி) அவர்களின் கூடாரத்திற்குச் சென்று தேடினால், அங்கு உமர் (ரலி) அவர்களும் இல்லை.

மூவரையும் தேடிக் கொண்டிருக்கும் போது படை வீரர்கள் முகாமிட்டிருந்த பகுதியின் எல்லைப் பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அதன் அருகே விரைவாகச் சென்று பார்த்தேன். அங்கு அண்ணலார் {ஸல்} அவர்களும், 
அபூபக்ர்(ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களும் நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அங்கே, கப்ர் ஒன்று தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. 
அதன் அருகே ஒரு ஜனாஸாவும் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் இறந்து போன அந்த மனிதர் யார்? என்று வினவினேன்.

அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உமது தோழர் அப்துல்லாஹ் துல் பஜாதைன்(ரலி) அவர்கள் தான் என்று கூறினார்கள்.

மாநபி {ஸல்} அவர்கள் மண்ணறைக்குள் இறங்கினார்கள். பின்னர் அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்களின் உடலை குழிக்குள் இறக்குமாறு கூறினார்கள்.

பின்னர், மண்ணறைக்குள் நின்றவாறு வானை நோக்கி கையை உயர்த்தி 

“யாஅல்லாஹ்! இன்று மாலை நேரத்தை அடைகிற போது இந்த அப்துல்லாஹ் துல் பஜாதைன் அவர்கள் வாழ்வை  நான் பொருந்திக் கொண்டேன்!
 
உன்னுடைய தூதராகிய நான் பொருந்திக் கொள்கிற நிலையில் அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! 

எனவே யாஅல்லாஹ் நீயும் அவரைப் பொருந்திக் கொள்வாயாக!” என்று இருமுறை துஆ செய்தார்கள். பின்னர் தாங்களே நல்லடக்கமும் செய்தார்கள்.

قال ابن مسعود: فوددت والله أني أنا الميت. 

அப்போது நான் ஆசைப்பட்டேன்...
இறந்து போன அப்துல்லாஹ் துல் பஜாதைக்கு பதிலாக அவ்விடத்தில் நான் இருந்திருக்கக் கூடாதா என ஏங்கினேன்.”
  ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல்ஃகாபா)


4. வாழும் போதே புகழோடும், வாழ்ந்து மரணித்த பின்னரும் அப்புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் அளவுக்கான வாழ்க்கை அமைய வேண்டும் என ஆசை வேண்டும்.

இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது….

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ

 “இறைவா! பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயக!” என்று பிரார்த்தித்ததை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மேலும், மறுமை நாளில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூறும் போது….

يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

“அந்த நாளில் மனிதனுக்கு அவன் மரணத்திற்கு முன் செய்த, அவன் மரணத்திற்கு பின் தனக்காக செய்து வைத்து விட்டு வந்த அனைத்துச் செயல்களும் எடுத்துக் காட்டப்படும்”

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ

“ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்து கொள்வான்”.
என்று கூறுகின்றான்.

மேற்கூறிய இறைவசனங்களுக்கு விரிவுரை தருகிற அறிஞர் பெருமக்கள் ஒரு மனிதன் மரணத்திற்கு பின்னரும் அவனுக்காக நாளை மறுமையில் அவனை ஈடேற்றம் பெறச் செய்கிற நல்லறங்களை மேற்கொண்டு, புகழ்மிக்க வாழ்க்கையை வாழவேண்டும் என்று” விளக்கம் தருகிறார்கள்.

5. மரணத்தை எந்த உயரிய உபகரணத்தின் துணை கொண்டும் வெல்ல முடியாது எனும் நம்பிக்கை ஆளமாகவும், எந்நேரத்திலும் நடக்கும் என்கிற நம்பிக்கையோடும் இருக்க வேண்டும்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை மரணம் வந்து அடைந்தே தீரும்.

இது வரை உலகில் எவரும் மரணத்தில் இருந்து தப்பித்து விட்டதாக செய்தி கிடையாது.

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

அல்லஹ் கூறுகின்றான்: “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்”.                                                    ( அல்குர்ஆன்: 3: 185 )

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை வந்து அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”
               ( அல்குர்ஆன்: 4: 78 )

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8)

“நபியே அம்மக்களிடம் நீர் கூறுவீராக! நீங்கள் மரணத்தை விட்டும் விரண்டோடிக் கொண்டிருக்கின்றீர்கள். 
ஆனால், நிச்சயம் அந்த மரணம் உங்களை ஒரு நாள் தழுவியே  ”தீரும்

      ( அல்குர்ஆன்: 62: 8 )


எனவே, நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு நாள் மரணத்தை தழுவ இருக்கின்றோம். இப்போது நாம் அமர்ந்திருக்கிற இதே பள்ளிவாசலிலோ, அல்லது இது போன்றதொரு பள்ளிவாசலிலோ நம்முடைய உடலை கஃபன் செய்து இறுதி பிரார்த்தனைக்காக எடுத்து வர இருக்கின்றார்கள்.

நம் எல்லோரையும் மரணம்  எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த நிலையிலும் வரலாம் என்பதை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த மரணம் வரும்போது, மலக்குகள் நம் ரூஹை வாங்க வரும்போது நாம் வெறும் கையும், வீசின கையுமாக போனால் என்னவாகும் நம் கதி…?

அல்லாஹ் இந்த நிலைமையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக!

அந்த மலக்குகளிடம் நான் இப்பொழுது வரமாட்டேன், கொஞ்ச நாட்கள், மாதங்கள் கழித்து வருகிறேன் என்றாவது சொல்ல முடியுமா?

اذا جاء اجلهم لا يستاخرون ساءتا. ولا يستقدمون
அல்லாஹ் சொல்கிறான்: “எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனை) பிற்படுத்த மாட்டான்.”
(அல்குர்ஆன் 63 : 11)

இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்தான். நம்மில் எல்லோருக்கும் மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. மறுமையில் நரகத்திலிருந்து தப்பிக்க, சுவனபதி கிடைக்க என்று ஆசைகள் மனதில் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள்தான் இல்லை. அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நமக்கு நேரமில்லை. ஏதோ இருந்தோம்! தொலைவோம்! என்று இருக்கிறோம்.

ஆனால், நம் சத்திய சஹாபாக்கள் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள், தங்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்ற இலட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அதனால், அவர்கள் எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “சிரமங்களால் சொர்க்கம் சூழப் பெற்றுள்ளது.
மனோ இச்சைகளால் நரகம் சூழப் பெற்றுள்ளது.” (முஸ்லிம்)

ஆனால் அந்த சொர்க்கம் சும்மா கிடைக்குமா?
ஒரு போதும் கிடைக்காது. ஏனெனில் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்). (அல்குர்ஆன் 2 : 214)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 155)

எனவே, நாம் துன்பங்கள், கஷ்டங்கள் என்று எந்த சோதனைக்குள்ளாக்கப்படும்போதும், சகித்துக் கொள்ள வேண்டும்.

ரசூல் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அடைந்த சோதனைகள் ஒன்றும் நம்மை அடைந்துவிடவில்லையே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறைநம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. (முஸ்லிம்)

ஆக, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு நல்லது ஏற்பட்டாலும், தீங்கு ஏற்பட்டாலும் அவன் பொறுமை காத்தான் என்றால் அவனுக்கு அது நன்மையாக முடிகிறது.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “கியாமத் நாளில் 4 விஷயங்களைப் பற்றி கேட்கப்படாமல் மனிதனின் காலடிகள் அசையாது:

1. அவனுடைய ஆயுள் காலம். அதை அவன் எப்படி செலவழித்தான்?

2. அவனுடைய வாலிபம். அதை எதில் தொலைத்தான்?

3. அவனுடைய செல்வம். எங்கிருந்து சம்பாதித்தான்? எதற்காக செலவழித்தான்?

4. கல்வி: அவனுக்கு தெரிந்தவைகளில் எதைக் கடைப்பிடித்தான்?” (திர்மிதி)

ஆக, கியாமத் நாளில் இவ்வகையான கணக்குகளை ஒப்படைக்காமல் அசைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஏழு விஷயங்களுக்கு முன்னால் நீங்கள் முண்டியடித்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்:

1. கடுமையான வறுமை

2. மித மிஞ்சிய பணம்

3. அழிவு தருகிற நோய்

4. மிகத் தள்ளாத வயது

5. (வாழ்க்கை முடிவுற்று) மரணத்தை நோக்கியுள்ள பயணம்

6. தஜ்ஜால் – அது எதிர்பார்க்கப்படுகின்ற மறைவானவற்றில் மோசமானது.

7. மறுமை நாள். (திர்மிதி)

அல்லாஹ் நமக்கு தந்திருக்கின்ற அருட்செல்வங்களைக் கொண்டு நாம் பயனடைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “மனிதர்களில் அதிகமானோர் கீழ்க்கண்ட அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்: 1. ஆரோக்கியம் 2. ஓய்வு.” (புகாரி)

ஆரோக்கியமும், ஓய்வு நேரமும் கிடைக்கும்போது நன்மையான வழிகளில் செலவழிக்க வேண்டும். நம் நேரத்தைக் கூறு போட்டு நன்மை செய்வதற்கென்று ஒதுக்க திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிடாவிட்டால், நமக்குக் கிடைத்த இந்த இரண்டு அருட்செல்வங்களை தொலைத்த நஷ்டவாளிகளாகி விடுவோம். நம்மை விட்டு அவை பறி போன பின் அப்பாடா… எப்பாடா… என்று கூறி நிலைகுலைந்து பயனில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள்! உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள்! அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.” (முஸ்லிம்)

அத்தகைய மறுமை நாளில் வேதனை மிகுந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வழி சொல்லும் ஒரு வியாபாரத்தை அல்லாஹ் அழகாக சொல்கிறான்:“நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய ரசூலையும் விசுவாசம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உங்களுடைய செல்வங்களைக் கொண்டும், சரீரங்களைக் கொண்டும் போரிட வேண்டும். அது உங்களுக்கு நன்மை பயக்கும் – நீங்கள் அறிந்திருந்தால்
.” (அல்குர்ஆன் 61 : 11)

இப்படியான, இன்னும் பல பாடங்களும், படிப்பினைகளும் நம் கண் முன்னே மரணம் என்கிற நிகழ்வு தந்து கொண்டிருக்கின்றது.

அல்லாஹ் நாம் பெறுகிற பாடங்களைக் கொண்டும், படிப்பினைகளைக் கொண்டும் வாழ்க்கையில் மாற்றத்தைத் தருவானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Comments

Popular posts from this blog

வட்டி இஸ்லாத்தின் பார்வையில்

குர்ஆன்,ஹதீஸ் ஔியில் 70 பெரும் பாவங்கள்.

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!